வருத்தம் தெரிவித்த விஜய்!
Tuesday, November 23, 2010
ரசிகர்களின் ரகளை மற்றும் தள்ளுமுள்ளுவால் ஈரோட்டில் நடக்கயிருந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் நடிகர் விஜய் கிளம்பினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோட்டில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பாலாஜியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு, நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் நடந்த மகாராஜா கலையரங்குக்கு விஜய் வந்த சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் ரகளையில் இறங்கி கூச்சல் போட்டனர். விஜய்க்கு பாதுகாப்பு அரண் அமைப்பதாகச் சொல்லி ஆளாளுக்கு வளையம் போட்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரிலேயே 30 நிமிடங்கள் காத்திருந்தார் விஜய். ஆனால், ரசிகர்கள் ரகளை அடங்காமல் தொடர்ந்ததால், போலீசார் நடிகர் விஜய்யை அங்கிருந்து கிளம்பி விடுமாறு அறிவுறுத்தினர். இதனால், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் விஜய் கிளம்பிச் சென்றார். ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் கூச்சலில் இறங்கினர்.
இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற மாநில செய்தி தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கூறுகையில் :
“தள்ளுமுள்ளு, நெரிசல் காரணமாக, அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக போலீசார் விடுத்த வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சியை விஜய் ரத்து செய்து விட்டார். நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காக விஜய் வருத்தம் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஈரோடு ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்குவார்” என்றார்.
0 comments: